அனுமதியின்றி நிறுவ முயன்ற இந்து முன்னணி கொடிக்கம்பம்அகற்றம்
அனுமதியின்றி நிறுவ முயன்ற இந்து முன்னணி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
பேரணாம்பட்டு
அனுமதியின்றி நிறுவ முயன்ற இந்து முன்னணி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க. நகர் செல்லும் வழியில் நேற்று முன்தினம் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு நகராட்சி சாலையோரம் அனுமதியின்றி இந்து முன்னணி கொடி கம்பம் அமைக்க சிமெண்டிலான பீடத்தை அமைத்தனர். தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று நகராட்சி ஊழியர்கள் மூலம் பீடத்தை இடித்து அகற்றினர்.
முறையான அனுமதி பெற்று கொடி கம்பம் அமைக்கும் படி போலீசார் அறிவுறுத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே இடத்தில் சட்டவிரோதமாக ஒன்று கூடி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் தற்காலிகமாக கற்கள்வைத்து இந்து முன்னணி கொடியை ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி அனுமதியின்றி நிறுவப்பட்ட இந்து முன்னணி கொடிக்கம்பத்தை அகற்றினர். இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
இந்து முன்னணியின் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ், பேரணாம்பட்டு பகுதி தலைவர் ஹேம் பிரசாத், அவரது தந்தை மார்கபந்து, ஒன்றிய பா.ஜ.க. தலைவி வனஜா, ரமேஷ் பாபு உள்பட 16 பேர் மீது நகராட்சி சாலையை சேதப்படுத்தியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதனையொட்டி கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
========