அனுமதியின்றி அமைத்த குடில்கள் அகற்றம்


அனுமதியின்றி அமைத்த குடில்கள் அகற்றம்
x

கோத்தகிரி அருகே சுற்றுலா பயணிகளை தங்க வைக்க அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடில்களை அகற்ற கலெக்டர் அம்ரித் நடவடிக்கை எடுத்தார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே சுற்றுலா பயணிகளை தங்க வைக்க அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடில்களை அகற்ற கலெக்டர் அம்ரித் நடவடிக்கை எடுத்தார்.

கலெக்டர் ஆய்வு

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி 100-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. வனப்பகுதிகளை ஒட்டி சிலர் பாதுகாப்பற்ற முறையில் அனுமதி இல்லாமல் தார்பாய்களால் தற்காலிக குடில்கள் அமைத்து, அங்கு சுற்றுலா பயணிகளை தங்க வைத்து வருகின்றனர். இதுகுறித்து புகார்கள் எழுந்தன. தொடர்ந்து அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் குடில்களை உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, குடில்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இருப்பினும், சுற்றுலா பயணிகளை தங்க வைத்தனர். இந்தநிலையில் நேற்று நீலகிரி கலெக்டர் அம்ரித் ஆடுபெட்டு, ஜக்கனாரை பகுதிகளில் அனுமதி இன்றி செயல்பட்ட குடில்களை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு உரிய அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட குடில்களை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குடில்கள் அகற்றம்

தொடர்ந்து கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் தீபக் மற்றும் அதிகாரிகள் ஆடுபெட்டு பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 10 குடில்கள், 10 கழிப்பிடங்கள், 6 குளியலறைகளை அகற்றினர். அரவேனு கேத்தரின் நீர்வீழ்ச்சி அருகே செயல்பட்டு வந்த 4 குடில்களை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கணுவட்டி கிராமம் அருகே 8 பெரிய குடில்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில் தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டி மறைமுகமாக குடில்கள் அமைக்கப்பட்டதும், அங்கு தங்கும் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் குடில்களை அகற்றும் போது, அதன் உரிமையாளர்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடில்கள் அகற்றப்பட்ட 2 இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். அனுமதி பெறாமல் பாதுகாப்பின்றி குடில்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


Next Story