நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருச்சி:
திருச்சி-திண்டுக்கல் சாலையில் அரிஸ்டோ மேம்பாலம் முதல் சோழன்நகர் வரை சாலையோரத்தின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி மேற்பார்வையில், உதவி பொறியாளர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். கடைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும், கடைகளுக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், மேற்கூரைகள், பொருட்கள் ஆகியவையும் அப்புறப்படுத்தப்பட்டன. முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் இடத்தை அளந்து பார்த்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு செசன்ஸ் கோர்ட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.