பழைய கடைகளை அகற்றிவிட்டு ரூ.1¾ கோடியில் புதிய கடைகள் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
சோளிங்கர் தினசரி மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை அகற்றிவிட்டு ரூ.1¾ கோடியில் புதிதாக 39 கடைகள் கட்ட நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சோளிங்கர் தினசரி மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை அகற்றிவிட்டு ரூ.1¾ கோடியில் புதிதாக 39 கடைகள் கட்ட நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ.1¾ கோடியில் புதிய கடைகள்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கூட்டம் நகர மன்ற கூட்ட அரங்கில் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பஜார் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் கட்டப்பட்டு 45 ஆண்டுக்கு மேலானதால் அந்த கடைகளை அகற்றிவிட்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 39 புதிய கடைகள் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்ட பணிகள் கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மார்க்கெட் பகுதியில் 12 கழிவறை ரூ.24 லட்சத்தில் கட்ட பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் 8-வது வார்டு உறுப்பினர் கோபால் பேசும் போது சோளிங்கர், வாலாஜா சாலையில் உள்ள டாஸ்மார்க் கடைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே இந்த கடைகளை நகராட்சி பகுதிக்கு வெளியே மாற்றியமைக்க வேண்டும் என்றார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி மற்றும் 18 கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தலைவரிடம் மனு அளித்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்குவதில் முறைகேடு ஏற்படுவதாகவும், இதனால் வங்கி கணக்கில் சம்பளத்தை வழங்க வேண்டும், கார்த்திகை மாதத்தில் யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நகராட்சி வரி வசூலிக்க வேண்டும், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்கள் ரூ.32 லட்சத்தில் அமைக்கும் பணிதொடங்கப்பட்டது. இதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
5-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சநேயன் பேசும் போது 27 வார்டுகளிலும் தெருக்களின் இரு பகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தெருக்களை விரிவுபடுத்தி, நிரந்தரமாக ஆக்ரமிப்பு செய்யாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த நகரமன்ற தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நகராட்சி ஆணையர் பரந்தாமன், துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை மற்றும் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.