சாலையில் தேங்கிய மணல் குவியல் அகற்றம்
தூத்துக்குடியில் சாலையில் தேங்கிய மணல் குவியல் அகற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகளாக பாளையங்கோட்டை ரோடு, வி.இ.ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளின் இருபுறமும் மற்றும் ரோட்டின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களின் அருகிலும் மணல் தேங்கி கிடந்தது. இதனால் இந்த வழியாக கார், வேன், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதிப்படலம் கிளம்பி அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்த மணல் குவியலை அகற்றவேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்பேரில் மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பாளையங்கோட்டை ரோடு, வி.இ.ரோடு, அண்ணாநகர் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள மணல்களை பார்வையிட்டார். பின்னர் மாநகர் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் உள்ள மணல் குவியலை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் முக்கிய சாலைகளில் தேங்கி கிடந்த மணல்குவியலை துரிதமாக அகற்றினர்.