சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பழுதடைந்த பாலத்தை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டுவதற்காக அங்கு சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு வடிகால் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வாகனங்கள் செல்லும் பாதையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே பால பணிகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் எளிதாக செல்ல உரிய வழிவகை செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையம் முதல் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் வரை சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளான பூக்கடைகள், பழக்கடைகள், ஜூஸ் கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் பல கடைகளின் விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அதிரடியாக அகற்றினர். இதன் காரணமாக அங்குள்ள சாலைகள் சற்று விசாலமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமமின்றி சென்றனர்.