சர்வீஸ் சாலையில் கிடந்த மணல் அகற்றம்


சர்வீஸ் சாலையில் கிடந்த மணல் அகற்றம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் கிடந்த மணலால் விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மணல் அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் கிடந்த மணலால் விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மணல் அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாகன ஓட்டிகள் காயம்

கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதன் கீழ்பகுதியில் சர்வீஸ் சாலை போடப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் சாலை ஓரத்தில் மழைநீர் வடிந்து செல்ல வசதியாக மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வடிகால் அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவில் கனமழை பெய்தது.

அப்போது மழைநீர் சாலையோரம் உள்ள வடிகாலில் செல்லாமல், சர்வீஸ் சாலையில் தேங்கி நின்றது. இதனால் கிணத்துக்கடவு போலீஸ் நிலைய பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளி வரை உள்ள சர்வீஸ் சாலையில் மணல் மூடி காணப்பட்டது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் கிடந்த மணலால் சரிக்கி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர்.

மணல் அகற்றம்

இதுகுறித்து சர்வீஸ் சாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், தேங்கி கிடக்கும் மணலை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 16-ந் தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், நவீன எந்திரம் மூலம் சர்வீஸ் சாலையில் கிடந்த மணலை அகற்றும் பணி நடந்தது. குறிப்பாக கிணத்துக்கடவு போலீஸ் நிலைய பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளி வரை உள்ள சர்வீஸ் சாலையில் தார்ச் சாலையை மூடி இருந்த மணல் அகற்றப்பட்டது. இதன் மூலம் மணலால் ஏற்படும் விபத்து அபாயம் நீங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.


Next Story