செந்தில் பாலாஜி நீக்கம்: கவர்னருக்கு அதிகாரமில்லை - சபாநாயகர் அப்பாவு


செந்தில் பாலாஜி நீக்கம்:  கவர்னருக்கு அதிகாரமில்லை -  சபாநாயகர் அப்பாவு
x

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக கவர்னர் செயல்பட்டுள்ளார் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் நீதிமன்ற காவலில் இருக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர் சிகிச்சையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

கைது செய்யப்பட்ட பின்னர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. பின்னர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர கவர்னர் ஆர்.என்.ரவி முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என உத்தரவிட்டார்.

இந்தநிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவில்லை . இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக கவர்னர் செயல்பட்டுள்ளார். நீதிமன்ற காவலில் இருப்பதால் அமைச்சர் பதவியை பறிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை என்றார்.


Next Story