குளங்களில் தேங்கி கிடக்கும் செடி, புதர்களை அகற்றும் பணி


குளங்களில் தேங்கி கிடக்கும் செடி, புதர்களை அகற்றும் பணி
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நகரில் குளங்களில் தேங்கி கிடக்கும் செடி, புதர்களை அகற்றும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரில் குளங்களில் தேங்கி கிடக்கும் செடி, புதர்களை அகற்றும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

செடி, புதர்கள் அகற்றும் பணி

மயிலாடுதுறை நகரில் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள குளத்தில் தேங்கியுள்ள செடிகளை, புதர்களை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காவிரி கரையில் ஈமச்சடங்கு நடைபெறும் இடத்தில் தேங்கி உள்ள புதர்களை அகற்றும் பணியினையும், கூறைநாடு ரேவதி நகரில் தேங்கியுள்ள செடி, புதர்களை அகற்றும் பணியினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப்பின் கலெக்டர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தூய்மை பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக மாவட்டம் முழுவதும் ஏரி, குளம், கிளை வாய்க்காலில் தேங்கி கிடக்கும் மரம், செடி, புதர்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. குளத்தின் கரையோரங்களில் மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

தூர்வார உத்தரவு

முன்னதாக, கூறைநாடு ரேவதி நகரில் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்களையும், தேங்கியுள்ள குப்பைகளையும் தூர்வார உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், மயிலாடுதுறை சோழம்பேட்டை அருமை இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முதியோர்களுக்கு ஆப்பிள், பிஸ்கட் கலெக்டர் வழங்கினார்.

முதியோர்களிடம் உங்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகின்றதா?, உங்களுக்கு ஏதேனும் தேவைகள் இருந்தால் சொல்லுங்கள், மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றதா? என அங்குள்ள முதியோர்களிடம் கேட்டறிந்தார். அருமை இல்லத்திற்கு தேவையான உதவிகள் இருப்பின், மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், நகராட்சி என்ஜினீயர் சனல்குமார், தாசில்தார் மகேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story