சாலையில் திரிந்த மாடுகள் அகற்றம்
சாலையில் திரிந்த மாடுகள் அகற்றப்பட்டன.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் கால்நடைகள் அதிகளவில் திரிந்து வருகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு பலர் காயம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தாசில்தார் லோகநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 13 மாடுகளை பிடித்து நெல்லை ஊத்துமலை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் தொடர்ந்து மாடுகளை பிடித்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தற்போது மேலும் 3 மாடுகளை பிடித்து கோசோலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடித்து அகற்றும் பணி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.