கோவில், பள்ளிவாசல் அகற்றம்
சாலை விரிவாக்க பணிக்காக கோவில், பள்ளிவாசல் இடித்து அகற்றப்பட்டன.
திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பழனி செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் ஒட்டன்சத்திரம் ரெயில்நிலையம் முன்பு சாலையோரத்தில் 75 ஆண்டு பழமையான காவடியப்பன் கோவில் மற்றும் அதன் அருகே டவுன் பள்ளிவாசல் இருந்தது. இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கும், பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தாமாக முன்வந்து கட்டிடத்துக்குள் இருந்த மரத்தினாலான ஜன்னல்கள், கதவுகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றினர். அதன்பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் மற்றும் பள்ளிவாசல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. சாலை விரிவாக்க பணிக்காக பழமை வாய்ந்த கோவில் மற்றும் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.