தற்காலிக காய்கறி மார்க்கெட் அகற்றம்


தற்காலிக காய்கறி மார்க்கெட் அகற்றம்
x

திண்டுக்கல்லில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர். அப்போது வியாபாரிகள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திண்டுக்கல்

காய்கறி மார்க்கெட்

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே காந்தி மார்க்கெட் உள்ளது. கொரோனா காலத்தில் காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. அதோடு மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து விட்டு, புதிய கடைகளை கட்டும் பணி நடந்தது. இதனால் திண்டுக்கல் நகருக்கு வெளியே பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் தனியார் இடத்தில் 80 கடைகளுடன், தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டது.

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் விளையும் காய்கறிகளை விவசாயிகள், அங்கு கொண்டு வந்து விற்றனர். மேலும் அங்கிருந்து வெளியூர்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே கொரோனா ஊடரங்கு முடிந்து, காந்தி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வந்தது. எனினும் தனியார் இடத்தில் இருந்த மார்க்கெட் தொடர்ந்து செயல்பட்டது.

வாக்குவாதம்

இதனால் தற்காலிக மார்க்கெட்டை காலி செய்யும்படி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் வியாபாரிகள் கடைகளை காலி செய்யாததால் மார்க்கெட் தொடர்ந்து செயல்பட்டது. இந்தநிலையில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரெங்கராஜன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை அங்கு வந்தனர்.

மேலும் மார்க்கெட்டில் இருக்கும் கடைகளை காலி செய்யும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வியாபாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள், வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் மார்க்கெட் கடைகளை அகற்றுவதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.

இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் தலைமையில் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் மார்க்கெட்டில் இருந்த 80 காய்கறி கடைகளும் அகற்றப்பட்டன.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story