பா.ஜ.க.வில் இருந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தலைவர் நீக்கம் -அண்ணாமலை அறிவிப்பு
பா.ஜ.க.வில் இருந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தலைவர் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு.
சென்னை,
சென்னையை அடுத்த மணலிபுதுநகரை சேர்ந்த பெண் ஒருவர் அம்பத்தூரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அந்த அழகு நிலையத்துக்கு லைசென்ஸ் வாங்கி தருவதாகவும், அழகு நிலையத்தில் இருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்ததாகவும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மூத்த நிர்வாகிகள் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான ஆடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 3 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து முழுமையாக அறிக்கை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பொன்.பாஸ்கர், முத்துராஜ் ஆகியோர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு.ராஜசேகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு புதிய மாவட்ட தலைவர் நியமனம் செய்யப்படும் வரை மாநில துணை தலைவராக செயல்பட்டு வரும் சக்கரவர்த்தி மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.