நீர் வழித்தடங்களை தூர்வார வேண்டும்
நீர் வழித்தடங்களை தூர்வார வேண்டும்
தளி
நீர்வழித்தடங்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு பஞ்சம்
கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் சாகுபடி செய்ய முடியாமல் ஏராளமான இடங்கள் தரிசாக கிடக்கிறது. கூடவே கூலி ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வு, முறையற்ற நீர்மேலாண்மை போன்றவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.பிரதான சாலையின் அருகில் இருந்த நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியது.
இதே நிலையில் சென்றால் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைந்து உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகளும் வெகுதொலைவில் இல்லை.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கு முதலில் நீர் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும். ஆறுகள், குளங்கள், அணைகள் ஏரிகள், நீர்வழித்தடங்கள் போன்றவற்றை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை வீணாக்காமல் முழுமையாக சேமிக்க வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்.வீணாக கடலில் கலக்கும் ஆறுகளை தடுத்து புதிதாக அணைக்கட்டுகள் கட்டப்பட வேண்டும்.
தூர்வார வேண்டும்
ஊராட்சி நிர்வாகங்கள் மூலமாக கிராமங்களைச் சுற்றியுள்ள நீர் வழித்தடங்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும். மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை புதிதாக குளங்கள் அமைத்து சேமிப்பது போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்தினால் ஓரிரு ஆண்டுகளில் நிலத்தடி நீர்இருப்பு உயர்ந்து ஓவ்வொரு கிராமமும் நீர்இருப்பில் தன்னிறைவு பெற்றதாக மாறும். விவசாயமும் செழிக்கும் வேலை வாய்ப்புகள் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
---