வேலூரில் ரூ.53 கோடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ்நிலையம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


வேலூரில் ரூ.53 கோடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ்நிலையம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

வேலூரில் ரூ.53 கோடியே 13 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ்நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலூர்

வேலூரில் ரூ.53 கோடியே 13 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ்நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலூர் புதிய பஸ்நிலையம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் 52 வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் புதிய பஸ்நிலையம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்க கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பூமி பூஜை போடப்பட்டது. 2 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு பின்னர் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதிய பஸ்நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்புவிழா நடந்தது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டியும், பஸ்நிலைய கல்வெட்டை ரிமோட் மூலமும் திறந்து வைத்தார்.

பின்னர் முதல்-அமைச்சர் புதிய பஸ்நிலையத்தை பார்வையிட்டு, அங்கிருந்து பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

84 பஸ்கள் நிற்க முடியும்

வேலூர் புதிய பஸ்நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். முதல் தளத்தில் 45 அறைகளும், மேல்தளத்தில் 40 அறைகளும் கட்டப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தின் குடிநீர் தேவைக்கு சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய முடியும். பஸ் நிலைய தண்ணீர் தேவைக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம், பாலாறு குடிநீர் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள கிணற்று நீரும் பயன்படுத்தப்படும்.

பஸ் நிலையத்தில் ஒரு நுழைவு வாயிலும், 2 வெளியேறும் வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மொத்த மின் தேவை 200 கிலோ வாட் ஆகும். இதில் 52 கிலோ வாட் மின்சாரத்தை மேற்கூரை சோலார் மின்தகடுகள் அமைப்பு மூலம் பெறப்படும். மின் சிக்கனத்திற்காக எல்.இ.டி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம்

முகப்பு கட்டிடத்தின் இரு பக்கமும் 2 மின்தூக்கிகள் (லிப்டுகள்), 4 இடங்களில் படிக்கட்டுகள் உள்ளது. பஸ் நிலையம் முழுவதும் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறையும், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வறை, போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வறை, காவலர் அறை, காவல் கண்காணிப்பு கோபுரங்கள், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 கழிவறைகள் உள்ளது.

மேலும் பஸ் நிலையத்தில் மழைநீர் வெளியேறி பூமிக்கு அடியில் சேமிக்கும் வகையில் 2 மீட்டர் ஆழத்துக்கு வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற 250 மீட்டர் தொலைவுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் முத்துமண்டபம் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து மறு சுழற்சி செய்யப்படும். பஸ் நிலையத்தில் உள்ள 85 அறைகளில் 78 அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட உள்ளது. அவற்றின் மூலம் ஆண்டிற்கு ரூ.2 கோடி வருமானம் கிடைக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story