தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் சீரமைப்பு பணி தொடங்கியது
மீனவர்கள் போராட்டம் எதிரொலியாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மறு சீரமைப்பு பணி தொடங்கியது.
கொல்லங்கோடு:
மீனவர்கள் போராட்டம் எதிரொலியாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மறு சீரமைப்பு பணி தொடங்கியது.
மீனவர்கள் உயிரிழப்பு
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் முகத்துவாரப்பகுதியில் படகுகள் கவிழ்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இங்கு விபத்தில் சிக்கி தூத்தூர் மற்றும் இனயம் மண்டலங்களை சேர்ந்த 25- க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனால் துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய கேட்டு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் துறைமுக முகத்துவாரத்தில் நாட்டு வள்ளம் ஒன்று கவிழ்ந்து பூத்துறையை சேர்ந்த மீனவர் சைமன் பலியானார்.
சாலை மறியல்
இதையடுத்து பூத்துறை மீனவ கிராம மக்கள் மற்றும் பலியான மீனவரின் குடும்பத்தினர் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை உள்பட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துறைமுக கட்டுமான பணிகள் உடனே தொடங்கப்படும் என்று அறிவித்தனர். அத்துடன் இறந்த மீனவரின் குடும்பத்திற்குரூ. 5 லட்சம் நிவாரணமும் வழங்கினர்.
இதனையடுத்து மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். மேலும் துறைமுக முகத்துவாரம் மறுசீரமைப்பு பணி முடிவடையும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என அறிவித்தனர்.
பணிகள் தொடங்கியது
இதனையடுத்து நேற்று காலையில் துறைமுக கட்டுமான பொறியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துறைமுகத்தில் இரையுமன்துறை பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து முதற்கட்டமாக துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டுமான பணிகள் தொடங்குவதற்காக கடலில் பொக்லைன் எந்திரங்கள் நிறுத்த தேவையான தடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக லாரிகளில் பாறை கற்கள் கொண்டு வரப்பட்டு கடலில் கொட்டும் பணி நடந்தது. இதனை குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர்.