குன்னூரில் சீரமைப்பு பணிகள் மும்முரம்


குன்னூரில் சீரமைப்பு பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் பகுதியில் கனமழையால் மண் சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

குன்னூர் பகுதியில் கனமழையால் மண் சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குன்னூரில் ஒரே நாளில் 30 செ.மீ. கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் ஆங்காங்கே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன.

ஒரே நாளில் 24 வீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கனமழையால் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள், மரங்கள் தண்டவாளம் மீது விழுந்தன. இதனால் மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று குன்னூரில் காலை முதலே வெயில் அடித்தது. மழை பெய்யாததால் மழை பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

சீரமைப்பு பணிகள்

மண் சரிவு ஏற்பட்ட உழவர் சந்தை, கல் குழி பாரதி நகர் செல்லும் சாலைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண் அகற்றப்பட்டது. ஆரோக்கியபுரம் பகுதியில் சாலை சேறும், சகதியுமாக மாறியிருந்தது. இதனை பொதுமக்களே அகற்றி சாலையை சீரமைதத்தனர். இதேபோல் மலை ரெயில் பாதையில் விழுந்த கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணியும் நடக்கிறது. இதனால் நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கனமழையால் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்த பின்னர் மலை ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story