நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
நீர் மின்நிலையங்கள்
மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தன் முழு கொள்ளளவை (120 அடி உயரம்) எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதாவது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடிக்கு கீழ் உள்ள நிலையில் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாகவும், வினாடிக்கு 23 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் போது 16 கண் மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
16 கண் மதகுகள் வழியாக
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மதியம் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மாலை 6 மணிக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 8 மணிக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் வெளிேயற்றப்பட்டது. இதன்படி 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.