பழுது பார்த்தல். சீரமைத்தல் பணிக்கு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிக்கு நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிதி உதவி
திருப்பத்தூர் மாவட்டத்தில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுடன் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் கூடுதலாக மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் நிதியுதவி பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவாலயம் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட இடம் ஆகியவை பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில்கொண்டு 10, 15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமும், 15, 20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையும், 20 வருடத்துக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும்.
ஆவணங்கள்
சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதி உதவியும் பெற்றிருக்கக் கூடாது. விண்ணப்பத்துடன் தேவாலயம் கட்டிடத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரைபடம் அனுமதி ஒப்புதல் பெறப்பட்ட ஆணை நகல் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட நாள், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை சான்று, உள்ளாட்சி அமைப்பு பொறியாளர்களிடம் இருந்து பெறப்பட்டிருத்தல் அவசியம்.
விண்ணப்படிவம் www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களை பழுதுபார்க்க மற்றும் புனரமைக்க இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.