தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் ஆபத்தான பள்ளம் சீரமைப்பு


தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் இருந்த ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்பட்டது.

மயிலாடுதுறை

பொறையாறு:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் இருந்த ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்பட்டது.

உப்பனாறு பாலம்

தரங்கம்பாடியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் உப்பனாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக புதுச்சேரி, நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றனர்.தினமும் இந்த பாலம் வழி யாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

ஆபத்தான பள்ளம்

போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் தடுப்புச்சுவரின் அருகே சாலையில் ஆபத்தான பள்ளம் இருந்தது. மேலும் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வந்தன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உப்பனாறு பாலத்தை பார்வையிட்டு ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

சீரமைக்கப்பட்டது

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் வெளிவந்தது. இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து உப்பனாறு பாலத்தில் இருந்த ஆபத்தான பள்ளத்தை சீரமைத்தனர்.இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story