வயல்களில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் வயல்களில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டன
குத்தாலம்:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் வயல்களில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டன.
தாழ்வாக சென்ற மின்கம்பிகள்
குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் சுமார் 1200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வயல்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றன. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ளமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
அறுவடை செய்ய எந்திரங்களை வயல்களுக்கு கொண்டு வந்ததால் மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் நிலை இருந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரிகள் வரமுடியாத நிலை இருந்தது.
சீரமைப்பு
சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 29-ந்தேதி படத்துடன் வெளிவந்தது.
இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் உத்தரவின் பேரில் மூவலூர் மின்வாரிய சிறப்பு நிலை ஆக்க முகவர் பரமசிவம் தலைமையில் மின்பாதை ஆய்வாளர் மோகனசுந்தரம் உள்பட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வயல்களில் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை சீரமைத்தனர்.
இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அந்த பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.