கிரிவலப்பாதையை சீரமைக்கும் பணி
பெரியகுளம் அருகே கோவில் கிரிவலப்பாதை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெரியகுளம் அருகே கீழவடகரையில், தைலாரம்மன் கரடு உள்ளது. இந்த கரடு பகுதியில் தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் கோவிலை சுற்றிலும் கரட்டு பகுதியில் கிரிவலப்பாதை உள்ளது. இந்தநிலையில் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கிரிவலப்பாதையில் கொட்டப்பட்டு வருவதாகவும், அதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் கிரிவலப்பாதையில் குப்பைகள், புதர்மண்டி கிடப்பதால் பக்தர்களும் அவதியடைந்து வந்தனர். இதனால் கிரிவலப்பாதை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் புதர்களை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிரிவலப்பாதையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொக்லைன் எந்திரம் மூலம் கிரிவலப்பாதையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், துணைத்தலைவர் ராஜசேகர், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.