கவுண்டன்ய மகாநதி ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கும்பணி
குடியாத்தம் கவுண்டன்ய மகாமதி ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் கவுண்டன்ய மகாமதி ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
குடியாத்தம் நகரின் மத்தியில் உள்ள உழவர்சந்தை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் தனிநபர் ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வருவாய்த்துறை, வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து உழவர் சந்தைக்கு சென்று பார்வையிட்டார். மேலும் உழவர் சந்தைக்கு வெளியே காய்கறி கடைகள் அமைந்துள்ள பகுதியில் சேர்ந்துள்ள குப்பைகளை தினந்தோறும் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்ய மகாநதி ஆறு செல்கிறது. இதில் கெங்கையம்மன் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த ஆற்றில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்துக்கு மிகவும் உதவியாக இருந்த இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலம் சீரமைப்பு
ஆற்றில் வெள்ளம் செல்லும்போது தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. தற்போது மழைக் காலம் என்பதால் ஆற்றில் வெள்ளம் செல்லும் போது போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க ரூ.5 லட்சத்தில் தற்காலிகமாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் 7 இடங்களில் ராட்சத பைப்புகள் வைத்து ஆற்றில் வரும் தண்ணீர் அதன் வழியாக செல்லும் வகையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த தரைப்பாலத்தில் நடைபெறும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோமோகன், என்.கோவிந்தராஜ், சி.என்பாபு, அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.அமர்நாத் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கிரிக்கெட் போட்டி
பொது சுகாதாரத்துறை மற்றும் சுகாதார நலப்பணிகள் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்களுக்கு நடந்த கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விளையாட குடியாத்தம் வட்டார மற்றும் கே.வி.குப்பம் வட்டார அணிகள் தேர்வு பெற்றன.
இந்த இரண்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பலூன்களை பறக்கவிட்டும், கிரிக்கெட் பேட்டிங் செய்தும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில்தாமஸ், கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அகிலாண்டேஸ்வரி, ரமேஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.