திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி சிந்தாமணியையும், ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டதால் பலமுறை சீரமைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து விரிசல்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி பாலத்தை சீரமைக்காக ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி முதல் காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி செல்லும் வழியில் காவிரி பாலத்தின் இடதுபுறம் குறிப்பிட்ட இடைவெளியில் இடம் ஒதுக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன. அதேநேரம் வலதுபுறத்தில் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. தற்போது பாலத்தில் வலதுபுறம் இடிக்கும் பணி நிறைவடைந்ததால் நேற்று முதல் இடதுபுறம் மூடப்பட்டு, வலதுபுறம் வழியாக இருசக்கர வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.