துணைமின் நிலையத்தில் பழுது; 10 மணி நேரம் மின்வினியோகம் பாதிப்பு
வாழப்பாடி:-
வாழப்பாடி பகுதியில் துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 10 மணி நேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும் துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென உயர் மின்னழுத்த சாதனங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. ஒருசில கிராமங்களுக்கு மட்டும் வேறு பகுதியில் இருந்து மின்வினியோகம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே மின்சாதனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர். இரவு 10 மணி வரையும் முயற்சி செய்தும் மின்சாதன பழுதை சரிசெய்ய முடியவில்லை. ஏற்கனவே பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இரவில் மக்கள் மின்சாரம் இல்லாமல் தூங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாயினர். 10-ம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாயினர்.
மின்கம்பி பழுது
சிங்கிபுரம் துணைமின் நிலைய தலைமை செயற்பொறியாளர் முல்லை கூறுகையில், உயர் மின்னழுத்த மின்சாரம் செல்லும் கம்பத்தில் பழுது ஏற்பட்டு மின்கம்பிகள் வெடித்ததால் அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பிகளில் பட்டு மின்கம்பிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. மதியம் 2 மணி முதல் முதல் நள்ளிரவு வரை அனைத்து மின்வாரிய ஊழியர்களும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டவுடன் மீண்டும் மீண்டும் மின் இணைப்பு சாதனங்கள் பழுதடைவதால் எந்த இடத்தில் பிரச்சினை என்பதை கண்டுபிடிக்க உடையாபட்டி பகுதியில் உள்ள மின்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் சோதனைக்கு பிறகு மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.