குடியரசு தினவிழா கொண்டாட்டம்
மதுரையில் விமான நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மதுரையில் விமான நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மதுரை விமான நிலையம்
நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில், விமான நிலைய இயக்குனர் பாபுராஜ் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனையும் அவர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, தீயணைப்பு துறை ஊழியர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். மோப்ப நாய்கள் மறைத்து வைக்கப்பட்ட வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன், துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அரசு ஆஸ்பத்திரி
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த குடியரசு தின விழாவில், டீன் ரத்தினவேல் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், துணை முதல்வர் தனலட்சுமி, மருத்துவ இருப்பிட அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீலதா உள்ளிட்ட டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். மதுரை ரெயில்வே காலனி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தேசியக்கொடி ஏற்றி போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். மதுரை எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில், தேசிய கொடியை செயற்பொறியாளர் மோகன் ஏற்றினார்.
மதுரை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் கண்ணன், உதவி தலைமை ஆசிரியர் வாசிமலை முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் குமரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.
நலத்திட்டம்
கோ.புதூர் அல்- அமீன் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஷேக் நபி தேசிய கொடி ஏற்றினார். இதில், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர் உசேன், உதவி தலைமை ஆசிரியர் ரகமத்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர். பசுமலை சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியில் கல்லூரி நிர்வாகி யாக்கோபு தேசிய கொடி ஏற்றினார். கல்லூரி துணை முதல்வர் மெர்லின் ஜெயபால், கல்லூரி முதல்வர் ஜோதி சோபியா உள்பட பலர் பங்கேற்றனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி, மக்கள் நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்றார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர்பாருக் தேசிய கொடி ஏற்றினார். தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சங்க அலுவலகத்தில் தலைவர் வேல்சங்கர் தேசிய கொடி ஏற்றினார். கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.