தேனியில், கோலாகலமாக நடந்த குடியரசு தின விழா:கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
தேனியில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் முரளிதரன் தேசிய கொடி ஏற்றினார். மேலும் 66 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை அவர் வழங்கினார்.
குடியரசு தின விழா
நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தேசியகொடி ஏற்றினார்.
பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், மாணவர் படையினரின் கம்பீர அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார். கலெக்டர் முரளிதரன், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஒற்றுமையின் அடையாளமாக வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டனர். தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார்.
முதல்-அமைச்சர் பதக்கம்
விழாவில் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 66 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் முரளிதரன் வழங்கி பாராட்டினார். மேலும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 275 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், 70 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 19 ஆயிரத்து 319 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேசப்பற்று, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடந்ததால் அவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் முரளிதரன் பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.