தூத்துக்குடியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்:கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடி ஏற்றினார்
தூத்துக்குடியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, ரூ.10¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடியரசு தினவிழா
இந்திய குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் காலை 8.10 மணிக்கு விளையாட்டு அரங்குக்கு வந்தார். அவரை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களையும் கலெக்டர் பறக்க விட்டார்.
நலத்திட்ட உதவி
விழாவில், சிறப்பாக பணியாற்றிய 54 போலீசாருக்கு நற்சான்றிதழ் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 406 பேருக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் இலவச தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, வேளாண்மைத்துறை மூலம் தென்னை மரம் ஏறும் கருவி, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தில் டிராக்டர் வழங்குதல் உள்ளிட்ட ரூ.10 லட்சத்து 77 ஆயிரத்து 818 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கொரோனா தொற்று காரணமாக அந்தந்த பகுதி தாசில்தார்கள் மூலம் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, காரப்பேட்டை நாடார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபுத்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், உதவி கலெக்டர் கவுரவ்குமார், தாசில்தார் செல்வக்குமர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், வேளாண்மை இணை இயக்குனர் பழனிவேலாயுதம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.