காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்க கோரிக்கை


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2022 7:07 PM GMT (Updated: 2022-06-08T10:14:12+05:30)

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

3 ஆண்டுகளாக பட்டம் கிடைக்காததால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு விரைந்து துணைவேந்தர் நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் ராஜேந்திரன் பதவிக்காலம் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 4-ந்தேதி நிறைவு அடைந்தது. இதனால் துணைவேந்தரின் பணிகளை மேற்கொள்ள உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் துணைவேந்தர் பொறுப்புக் குழு அமைக்கப்பட்டது.

புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய கன்வீனராக விசாகப்பட்டிணம் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சத்தியநாராயணா தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தகுதியான 3 பேரை தேர்வு செய்து பல்கலைக்கழக வேந்தரும் தமிழக முன்னாள் கவர்னரான பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரைத்தது.

இந்த நிலையில் முன்னாள் கவர்னர் தேடுதல் குழு பரிந்துரைத்த 3 நபர்களையும் நிராகரித்தது மட்டுமல்லாமல் தேடுதல் குழுவையும் கலைத்து உத்தரவிட்டார். இதனால் துணைவேந்தர் நியமனப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

3 ஆண்டுகளாக...

தற்போதைய கவர்னர் ரவி புதிய தேடுதல் குழுவை அமைத்து கன்வீனராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பல்கலைக்கழக மானியக்குழுவின் தற்போதைய தலைவருமாகிய ஜெகதீஷ் குமார் என்பவரை நியமித்தார். இக்குழு தகுதியுடைய 3 பேரை கவர்னருக்கு பரிந்துரைத்ததா? இல்லையா? என்பது இதுவரை தெரியவில்லை.

புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படாததாலும் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததாலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பட்டங்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். பட்டங்கள் கிடைக்காததால் வேலை வாய்ப்பும் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா காலதாமதம் ஆவதால் பட்டம் உடனடியாக வேண்டும் என கேட்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தரின் ஒப்புதல் பெற்று பட்டம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே அழகப்பா பல்கலைக்கழகமும் பட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

துணைவேந்தரை நியமிக்க கோரிக்கை

தற்போது அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைகழகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக் கோப்புகளில் முடிவெடுப்பதில் காலதாமதமும் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் நிலவி வருகிறது.

எனவே அழகப்பா பல்கலைக்கழகத்தில் விரைவில் புதிய துணைவேந்தர் நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அரசு மற்றும் தமிழக கவர்னர் உடனடியாக துணைவேந்தர் நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story