பனை ஏறும் தொழிலாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற அரசு உதவ வேண்டும்
பனை ஏறும் தொழிலாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற அரசு உதவ வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாயல்குடி,
பனை ஏறும் தொழிலாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற அரசு உதவ வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பதநீர்
சாயல்குடி சுற்றுப்பகுதிகளான மேலச்செல்வனூர், கடுகு சந்தை, சத்திரம், பூப்பாண்டியபுரம், உறைக்கிணறு, நரிப்பையூர், வெட்டுக்காடு, மாணிக்க நகர், கன்னிராஜபுரம், காவாகுளம், பெரியகுளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மரங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதிகளில் பனை தொழிலாளர்கள் தை மாதம் ஆரம்பம் முதல் ஆனி மாதம் வரை பனை மரத்தில் பதநீர் இறக்கி காய்ச்சி கருப்பட்டி உற்பத்தி செய்கின்றனர். பனைமர தொழிலாளி நாள் ஒன்றுக்கு குறைந்தது 40 பனைமரங்களில் காலை, மாலை நேரங்களில் பனை மரத்தில் வரும் பாலையை சீவி கலயத்தில் பதநீர்க்காக கட்டி விடுகின்றனர்.
40 பனை மரங்களில் 4 குடம் பதநீர் மட்டும் வரும். அதனை 3 மணி நேரம் வட்டையில் ஊத்தி காய்ச்சினால் 10 கிலோ கருப்பட்டி கிடைக்கும். அதனை ஒரு வாரத்திற்கு காய்ச்சி சேகரிக்கும் கருப்பட்டியை வியாபாரிகளிடம் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். பனை தொழில் இல்லாத சமயங்களில் வியாபாரிகளிடம் வாங்கும் கடனுக்கு வட்டியும், முதலுமாக கட்டி வருவதால் இப்பகுதியில் உள்ள பனை தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றமில்லாமல் கூலி தொழிலாளியாக மட்டுமின்றி, வியாபாரிகளிடம் வாங்கிய கடனுக்கு கொத்தடிமைகளாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு தங்கள் வாழ்வில் ஏற்றம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பனை தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேமிப்பு கிடங்கு
இதுகுறித்து பூப்பாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த பனை தொழிலாளி பொன்னையா கூறுகையில், பனை தொழிலாளர்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து 6 மாதம் பதநீர் இறக்கி காய்ச்சி வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம். தொழில் இல்லாமல் இருக்கும் 6 மாத காலத்தில் காட்டு கருவேலமரங்கள் வெட்டுவதற்கும், வயலில் களை எடுப்பதற்கும் தொழிலாளர்களாக செல்வோம். போதிய வருமானம் இல்லாததால் கருப்பட்டி வியாபாரிகளிடம் வாங்கும் கடனுக்கு வட்டியும், முதலும் சேர்த்து கருப்பட்டியை அவர்கள் கேட்கும் விலைக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். இங்குள்ள பனை தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பெயர் அளவிலேயே செயல்படுகின்றன. இப்பகுதிகளில் பனை கருப்பட்டிக்கு சேமிப்பு கிடங்கு அமைத்து அரசு மூலம் தொழிலாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும். கருப்பட்டிக்கு நிர்ணய விலையை வைத்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.
சேர்மக்கனி:- பதநீர் இறக்கும் காலத்தில் குடும்பத்தில் உள்ள பெண்கள் பதநீர் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுவதால் வேறு எந்த பணிக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். பனை தொழிலாளி பனை ஏறும் போது தவறி விழுந்து இறந்தால் எந்த நிவாரணமும் கிடையாது. இறந்தவர் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வாங்கிய கடனுக்காக பனை தொழிலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அரசு பனை தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்தில் நிவாரணமும், விவசாயிகள், மீனவர்களுக்கு வழங்குவது போல் வட்டி இல்லா கடனும் வழங்க வேண்டும் என்றார்.
ஏற்றம்பெற
சாயல்குடி அருகே உறைக்கிணறு கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்:- வருடம்தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக மழை பெய்தால் மட்டுமே பனை மரங்களில் பாலைகள் அதிகமாக வந்து பதநீர் கிடைக்கும். பனை தொழில் செய்யும் காலத்தில் மழை பெய்தால் பதநீர் தடைபடும். பனை மரங்களை வெட்டுவதற்கு தடை செய்து பாதுகாப்பு தரும் அரசு பனைமர தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை இதுவரை வழங்கவில்லை. இப்பகுதியில் தான் கலப்படம் இல்லாத கருப்பட்டி உற்பத்தி ஆகிறது இக்கருப்பட்டியை வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் மருந்து பொருட்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். பனை தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் கருப்பட்டியை தகுந்த விலை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பனை தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் பெற அரசே நேரடியாக வட்டியில்லா கடன் வழங்கியும், தொழில் இல்லாத நேரங்களில் வாழ்வாதாரத்தை பெருக்கி கொடுத்தால் மட்டுமே பனை மரங்களை காக்க முடியும் என்றார்.