சிங்கம்புணரியில் ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்-சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை
சிங்கம்புணரியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அங்கன்வாடி மையம்
சிங்கம்புணரி வண்ணார் வளவு பகுதியில் பல ஆண்டுகளாக அரசு கட்டிடத்தில் அமைந்துள்ளது அங்கன்வாடி மையம் எண் 3. இந்த மையத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டு பயின்று வந்தனர். இந்த மையம் கடந்த 2006-ம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு இயங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் கட்டிடம் உள்ளது. கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கட்டிடத்தின் சுவர்கள் உள்ளேயும், வெளியேயும் ஆங்காங்கே பெயர்ந்து உதிர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகளின் பெற்றோர் அங்கன்வாடி மையத்தில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அச்சம் அடைகின்றனர்.
பாதுகாப்பற்ற நிலை
கட்டிடம் சிதிலம் அடைந்து வருவதால் இங்கு தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். தற்போது இங்கு 20 குழந்தைகள் மட்டுமே பயின்று வருகிறார்கள். மேலும் அங்கன்வாடி மையத்தில் போதிய உணவு கூடம் இல்லாததால் கட்டிடத்தின் உள்ளே மையப்பகுதியில் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புகையால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கூறும்போது, சிங்கம்புணரி வண்ணார் வளவு பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் கடந்த சில ஆண்டுகளாக சிதிலம் அடைந்து வருகிறது. இந்த கட்டிடம் தற்போது ஆபத்தான நிலையில் சுவர்கள் ஆங்காங்கே அரிப்புகள் ஏற்பட்டு, மேற்கூரை உடைந்து உள்ளதாலும் மழை நீர் உள்ளே புகுந்து பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருகிறது.
கோரிக்கை
மழைக்காலத்தில் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டவும், தற்காலிகமாக மாணவர்களுக்கு பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து அங்கன்வாடி மையம் நடத்தவும், தனி சமயலறை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.