விக்கிரமங்கலம்- கும்பகோணம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை


விக்கிரமங்கலம்- கும்பகோணம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
x

விக்கிரமங்கலம்- கும்பகோணம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அம்பாப்பூர், ஆலவாய், கீழநத்தம், செங்குழி, உடையவர் தீயனூர், பட்டகட்டாங்குறிச்சி, மழவராயநல்லூர், கோவில் சீமை, கடம்பூர் போன்ற ஊர்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கும்பகோணத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் ஊர்களில் இருந்து விக்கிரமங்கலம் வந்து அங்கிருந்து பஸ்சில் கும்பகோணம் சென்று வருகின்றனர். இந்நிலையில் தினமும் அரியலூரில் இருந்து காலை 6.30 மணியளவில் விக்கிரமங்கலம், முத்துவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், மதனத்தூர் வழியாக ஒரு அரசு பஸ் மட்டுமே கும்பகோணத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

அந்த பஸ்சிலேயே மாணவ, மாணவிகள் பயணம் செய்கின்றனர். இந்த பஸ் பழுதடைந்தாலோ அல்லது வேறு காரணங்களால் வராவிட்டாலோ மாணவ, மாணவிகள் கல்லூரி செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காரைக்குறிச்சி சென்று, அங்கிருந்து அவர்கள் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்களில் செல்லும் சூழ்நிலை உள்ளது.

மாணவ, மாணவிகள் சிரமம்

மேலும் கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகள் கும்பகோணத்தில் இருந்து ஊருக்கும் திரும்பும்போது, 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதிக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால், காரைக்குறிச்சி வரை பஸ்சில் வந்து, அங்கிருந்து வேறு வாகனங்களிலோ அல்லது சரக்கு ஆட்டோக்களிலோ விக்கிரமங்கலம் பகுதிக்கு வரும் நிலை உள்ளது. இனால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சிறு விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிர் செய்யும் காய்கறிகளை கும்பகோணத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு எடுத்துச்சென்று விற்பனை செய்வதற்குரிய வகையில் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கோரிக்கை

மேலும் கோவில்களின் நகரமாக கும்பகோணத்திற்கு இப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் சென்று வருகின்றனர். அவர்களும், சரியான பஸ் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தினமும் காலை மற்றும் மாலை ேநரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். அல்லது கும்பகோணத்தில் இருந்து விக்கிரமங்கலத்திற்கு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் நீண்ட கால கோரிக்கை ஆகும். எனவே இனியும் தாமதிக்காமல் கூடுதல் பஸ்கள் அல்லது டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story