சீவலப்பேரியில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட கோரிக்கை
சீவலப்பேரியில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என யாதவர் மகாசபையினர், கலெக்டாிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியில் விவசாயி மாயாண்டி என்பவர் கடந்த 10-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள சுடலை மாடசுவாமி கோவில் பகுதியில் அளந்து கல் போடும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் யாதவ மகாசபை மாவட்ட மாவட்டச் செயலாளர் கே.ஆர்.வள்ளிநாயகம் யாதவ் தலைமையில், அவைத்தலைவர் மூக்காண்டி தாஸ், மாவட்டத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் சீவலப்பேரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மேலும் அங்கு போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் இவர்கள் மனு கொடுத்துள்ளனர்.