குடிநீர் வினியோகிக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் வினியோகிக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மின் மோட்டாரில் பழுது
தாளவாடியை அடுத்த கரளவாடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு மேல்நிலை தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக இங்குள்ளவர்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாக இங்குள்ளவர்கள் அந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்தநாதீஸ்வரன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், 'குடிநீர் விரைவில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.