சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூருக்கும், மூலங்குடிக்கும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் என தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும்.
எனவே ஓகைப்பேரையூர், வடபாதிமங்கலம், நாகராஜன்கோட்டகம், ராமானுஜமணலி, திட்டச்சேரி, கலிமங்கலம், பூந்தாழங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சீரமைக்க கோரிக்கை
இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், சாதாரண சைக்கிளை கூட இந்த சாலையில் ஓட்டி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், மழை காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், வேலைகளுக்கு சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த இந்த சாலையை முழுமையான தார் சாலையாக சீரமைப்பு செய்து தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.