குடிநீர் மின்மோட்டாரை சீரமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் புவனகிரி அருகே பரபரப்பு


குடிநீர் மின்மோட்டாரை சீரமைக்க கோரி  காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்  புவனகிரி அருகே பரபரப்பு
x

புவனகிரி அருகே பழுதான குடிநீர் மின் மோட்டாரை சீரமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

புவனகிரி

புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குடிநீர் வினியோகத்துக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பழுதானது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பழுதான மின்மோட்டாரை சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலிகுடங்களுடன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர்.

மறியல்

பின்னர் அவர்கள் பழுதான மின் மோட்டாரை சீரமைத்து தினமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்ததுடன், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த மருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உடனடியாக பழுதான மின் மோட்டாரை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற பெண்கள், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story