டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து பங்குத்தொகையை பெற்றுத்தரக் கோரிக்கை
டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து பங்குத்தொகையை பெற்றுத்தரக்கோரி ஏராளமானோர் பொருளாதார குற்றப்பிரிவில் மனு அளித்தனர்.
திருச்சியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று பொதுமக்களிடம் பங்குத்தொகை பெற்று தொழில் செய்து வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்குதாரர்களாக இணைந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பங்குத்தொகை அளித்திருந்தனர். ஆரம்ப காலங்களில் வரவு-செலவுகள் சரியாக நடந்து வந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் அந்த டிராவல்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களிடம் பெற்ற பங்குத்தொகைக்கு உரிய பணத்தை திருப்பி தருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சமீபத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திடீரென மரணமடைந்தார். இதனால் பொதுமக்களின் பங்குத் தொகையை திரும்ப பெறுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து மேற்படி நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்த பொதுமக்கள் தங்கள் பங்குத்தொகையை மீட்டுத்தரக்கோரி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சினை தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இதற்கு தீர்வு காண தனியாக துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தங்கள் புகார் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ளவும், கூடுதலாக புகார் அளிக்கவும் ஒரே நேரத்தில் ஏராளமானோர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு நேற்று காலை திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு திரண்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவா்களது புகார் மனுக்களை பெற்று கொண்டனர். மேலும், புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.