அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை


அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
x

சேதுபாவாசத்திரம் அருகே அடிப்படை வசதிகள் இன்றி சுப்பம்மாள்சத்திரம் கிராமமக்கள் அல்லல்படுகின்றனர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சிக்கு உட்பட்டது சுப்பம்மாள் சத்திரம் கிராமம். இது, கிழக்கு கடற்கரை சாலையில் சேதுபாவாசத்திரத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள மீனவ கிராமம் ஆகும்.

இங்கு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு சிலர் வெளிநாட்டில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். 40-க்கும் மேற்பட்டோர் நாட்டுப்படகுகளை வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலாளர்களாக கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை

இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து கடற்கரை செல்லும் 1 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணி முழுமையாக முடிவடையாமல் பாதியில் நிற்கிறது.

மீன்பிடி துறைமுகம் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. 40 நாட்டுப்படகுகளை நிறுத்தி வைக்க சரியான இடவசதி இல்லை. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மின் விளக்கு இல்லாமல் உள்ளது. இப்பகுதியில் குடிநீர்த் தொட்டி ஒன்று உள்ளது. ஆனால் சுத்தம் செய்யப்படுவதில்லை.

எனவே, கடற்கரையை தூர்வாரி படகுகள் நிறுத்துமிடம் அமைத்துத் தரவேண்டும். குடியிருப்பு பகுதியில் இருந்து கடற்கரை வரை மின் விளக்கு அமைத்து தர வேண்டும். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார் அட்டையை ஒப்படைக்க முடிவு

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.எம். வீரப்பெருமாள், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தை பார்வையிட்டனர்.

தொடர்ந்து கட்சியின் கிளைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுப்பம்மாள் சத்திரத்திற்கு என தனி மீனவர் சங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமம் மாவட்டத்தில் கடைக்கோடி பகுதியில் இருப்பதால் மீன்வளத்துறை, ஊராட்சி, அரசுத்துறை நிர்வாகங்கள் கவனிக்காத நிலை உள்ளது.

எனவே, அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் மீனவ மக்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில், இப்பகுதி மீனவ மக்கள் தாசில்தார் அலுவலகத்தில், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





Next Story