மாப்பிள்ளையூரணியில் மின்மயானம் அமைக்கும் பணியை கைவிட கோரிக்கை


மாப்பிள்ளையூரணியில் மின்மயானம் அமைக்கும் பணியை கைவிட கோரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாப்பிள்ளையூரணியில் மின்மயானம் அமைக்கும் பணியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுகொடுத்துள்ளனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் இருப்பதால், மின்மயானம் அமைக்கும் பணியை கைவிடவேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

அ.தி.மு.க.(ஓ.பன்னீர்செல்வம் அணி) தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி- நெல்லை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் புதுக்கோட்டையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகிறது. இப்பகுதியில் ேதவையற்ற போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. விமான நிலையத்துக்கு செல்வோம் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த மேம்பால பணிகளை உடனே முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வல்லநாட்டில் பழுதடைந்துள்ள தாமிரபரணி ஆற்றுபாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மின்மயானம் கூடாது

மக்கள் சமூக பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் அகஸ்டின் ஜான் ராஜா தலைமையில் அளித்துள்ள மனுவில், மாப்பிள்ளையூரனி ஊராட்சி ராஜீவ் காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சுடுகாடு உள்ளது. இங்கு மின் மயானம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த மின் மயானத்தின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாவார்கள். சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் மின் மயானம் அமைக்கும் பணியினை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

நிலத்தை திருப்ப தர...

தமிழக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் காந்தி மள்ளர் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்காக பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது மதிப்பீட்டுத்தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.20 லட்சமாக உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் மூலமாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக கொடுத்த நிலத்தை 2018-ம் ஆண்டு மே 30-ந்தேதி அரசு ரத்து செய்திருக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக எடுத்த இடத்தை திருப்பி வழங்க வேண்டும் அல்லது சந்தை மதிப்புப்படி ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்


Next Story