முடி எடுக்கும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க கோரிக்கை
முடி எடுக்கும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை அளிக்கப்பட்டது.
முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் சங்க தலைவர் கணபதி தலைமையில் இணை தலைவர் சரவணன், செயலாளர் விஜயகுமார், மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, துணை செயலாளர் முத்து, ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம் மற்றும் நிர்வாகிகள் பலர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் எங்கள் முடிதிருத்தும் (மருத்துவர்) சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் மருத்துவர் சமூக மக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளதை போன்று தமிழக அரசும் வழங்க வேண்டும்.
கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக்கலைஞர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசி அரசு ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.