இறைச்சி கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
திருச்சுழி பகுதிகளில் செயல்படாத இறைச்சி கூடங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி,
திருச்சுழி பகுதிகளில் செயல்படாத இறைச்சி கூடங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்றுநோய்
திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் இறைச்சி விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
ஒரு சில கடைகளில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளை திறந்த வெளியில் வைத்து வெட்டி விற்பனை செய்கின்றனர்.
அதிலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை ஓரங்களில் கடைகளை வைத்துள்ளனர். எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்வதால் இறைச்சியின் மீது தூசி படிகிறது.
உடல்நிலை பாதிப்பு
இறைச்சி கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது.
ஒரு சில கடைகளில் நோய் பாதித்த ஆடு, மாடு, கோழிகளை வெட்டி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களின் உடல் நிலை பாதிக்கக்கூடும்.
அதிகாரிகள் நடவடிக்கை
இறைச்சி கூடங்கள் ஒரு சில இடங்களில் செயல்படாமல் முடங்கி உள்ளது. இதன் மூலம் எதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ அது நிறைவேறாமல் போய்விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செயல்படாமல் உள்ள இறைச்சி கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தரமான இறைச்சி வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.