தொழிலாளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை
தொழிலாளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், மைனாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஹரித், ஹர்சன், என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புரூனேநாட்டிற்கு கூலி வேலைக்காக ெசன்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி உடல் நலக்குறைவால் சுரேஷ் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 25-ந்தேதி சிகிச்சை பலனின்றி சுரேஷ் இறந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராஜலட்சுமி, தனது கணவர் உடலை மீட்டு தருமாறு மாவட்ட கலெக்டரிடம் கடந்த மாதம் மனு கொடுத்துள்ளார். மேலும் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு ரூ.24 லட்சம் கட்டினால் மட்டுமே உடலை அனுப்பி வைப்பதாக புரூனே நாட்டில் உள்ள மருத்துவமனை டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும், சுரேஷ் மனைவி மற்றும் உறவினர்கள் கூறுகையில், சுரேசை உயிருடன் சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியவில்லை. அவரது உடலையாவது மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.