பள்ளிகொண்டா பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற கோரிக்கை
பள்ளிகொண்டா பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகொண்டா பேரூராட்சி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள பள்ளிகொண்டா பேரூராட்சியாக உள்ளது. பள்ளிகொண்டா, கீழச்சூர், வெட்டுவானம், என மூன்று வருவாய் கிராமங்களும், பள்ளிகொண்டா, கீழாச்சூர், வேப்பங்கால், ஸ்ரீ ராமாபுரம், வெட்டுவானம் அம்பேத்கர் நகர், மேல்வெட்டுவானம், கோவிந்தம்பாடி, கட்டுப்படி என சிறு கிராமங்களை உள்ளடங்கிய சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழ்ந்து வருகின்றனர். 30 ஆயிரம் மக்கள் தொகை இருந்தால் நகராட்சியாக மாற்றலாம் என்றவிதி இருந்தும் பேரணாம்பட்டு மட்டுமே நகராட்சியாக மாற்றப்பட்டது.
அணைக்கட்டு தொகுதியிலேயே அதிக மக்கள் தொகை உள்ள பேரூராட்சி பள்ளி கொண்டா பேரூராட்சியாகும். ஆனால் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் போக்குவரத்து வசதி சிறப்பாக உள்ளது.
சார்பதிவாளர் அலுவலகம்
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் இங்கிருந்து ஒருவர் கூட சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ போட்டியிட்டு ஜெயிக்கவில்லை. பக்கத்து ஊரில் பிறந்து இந்த ஊரை தாயகமாக கொண்ட ராஜா, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
பள்ளிகொண்டா 1892-ம் ஆண்டில் சித்தூர் மாகாணமாக இருந்தபோது சார் பதிவாளர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவ் பணியாற்றியதாக குறிப்புகள் உள்ளது. அதுவும் கே.வி.குப்பம் சார் பதிவாளர் அலுவலகம், ஒடுகத்தூர் சார் பதிவாளர் அலுவலகம் பிரிக்கும் போது பள்ளிகொண்டா சார்பதிவாளர் அலுவலகம் பறிபோனது.
நகராட்சியாக மாற்ற வேண்டும்
இது குறித்து பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பாஸ்கரன் கூறியதாவது:
தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் ஆம்பூர் உட்கோட்டத்தை உள்ளடங்கி பள்ளி கொண்டாவில் அமைக்கப்பட்டது. இதுவரை இந்த மின்வாரிய அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் ஒதுக்கி தரப்படவில்லை. எனவே அனைத்து வசதிகளும் கிடைக்க பள்ளிகொண்டா பேரூராட்சியை, நகராட்சியாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
பள்ளிகொண்டா பேரூராட்சியில் 11 ரேஷன் கடைகள் இருந்தும் அதில் பல கடைகள் சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டத்தில் இயங்கி வருகின்றது. பள்ளிகொண்டா பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்தும் சென்னை- பெங்களூரு போன்ற பெரிய நகரங்களுக்கு பஸ்கள் நின்று சென்றாலும் இதுவரை ஒரு பஸ் நிலையம் கட்டப்படவில்லை. இங்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக்க முயன்ற போது அந்த திட்டம் ஒடுகத்தூருக்கும், அணைக்கட்டுக்கும் சென்றது. பள்ளிகொண்டா பேரூராட்சியில் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் தொழிற்சாலையும் இல்லை. தொழிற்பயிற்சி நிலையங்கள். இல்லை இதனால் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே பள்ளிகொண்டா பேரூராட்சியா நகராட்சியாக மாற்றி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும்.