அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்
அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மைய சங்கத்தின் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பிற துறைகளில் உள்ள சமையலர், இரவு காவலர்கள் ஆகிய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும். அலுவலக வேலையாக அலுவலக உதவியாளர்கள் வெளியே சென்று வர பயணப்படி வழங்க வேண்டும். 2 ஆண்டுகளாக வழங்கப்படாத பயணப்படியை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.