நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டுகோள்


நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டுகோள்
x

நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் நிறுவனர் காரை சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய ஆதிவாசிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஞானசுந்தரி கலந்து கொண்டு பேசினார். மத்திய அரசு நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37-வது பிரிவில் சேர்த்து காலதாமதமின்றி விரைவில் நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் தனியார் கல்லூரியில் படித்து வரும் நரிக்குறவர் மாணவ-மாணவிகளுக்கு பழங்குடியினர் சலுகையில் கல்வி உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நரிக்குறவர்கள் தொழில் முன்னேற்றம் அடைய தமிழகத்தில் இருக்கின்ற பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சுற்றுலாத்தலம், பஸ் நிலையம் மற்றும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் பிரசித்தி பெற்ற கோவில்களில் 5 கடைகள் ஒதுக்கீடு செய்து தொழில் தொடங்க மானிய கடன் வழங்க வேண்டும். வீட்டு மனைப்பட்டா, வீடு மற்றும் நிலமற்றவர்களுக்கு 3 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்காக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் நம்பியாா் வரவேற்றார். முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் நன்றி கூறினார்.


Next Story