அனைத்து உப்பள தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உப்பள தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உப்பள தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உப்பள தொழிலாளி
உப்பளத் தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக மழைக்கால நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களுக்கு ஒருநாள் மழைகூட பேரிடராக மாறும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழைக்காலமாக இருப்பதால், உப்பு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாற்று வேலை என்பது உடல் ரீதியாக சாத்தியம் இல்லாத நிலை உள்ளது.
நிவாரணம்
இந்த நிலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இதற்காக பரிந்துரை செய்த கனிமொழி எம்.பி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆகையால் விடுபட்ட அனைத்து உப்பள தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.