மின்கம்பி அறுந்து கிடந்தால் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
வடகிழக்கு பருவமழையின் காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க ேவண்டும் என பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மின்பாதையில் மின்கம்பி அறுந்து கிடந்தால் பொதுமக்கள் எவரும் அதனை தொடாமலும், அருேக செல்லாமலும் உடனடியாக அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையிலோ, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின் கம்பிகள் தொய்வாய் இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மின்வாரியத்தை சாராத நபர்கள் எவரும் மின்தடை சரிசெய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது. மின்தடை ஏதும் ஏற்பட்டால், அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரிய பணியாளர்கள் மூலம் மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும்.
மின் கசிவு
பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதனருகில் செல்லாமலும் அருகே மின்பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும். பொது மக்கள் மின்பாதைக்கு அருகில் வீடு கட்டிடம் கட்டும் போது மின் பாதையிலிருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மின்பாதையின் அருகில் செல்லாமலும், மின்பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக கட்டுமான பணியை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றின் ஒயரிங் செய்யும் போது தரமான ஒயரிங் சாமான்களை உபயோகித்தும், முறையான நில இணைப்பு கொடுத்தும் ஒயரிங் செய்ய வேண்டும். மேலும் மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு எர்த் லீக்கேஜ் சர்கியூட் பிரேக்கர் பொருத்த வேண்டும். பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தினை தவிர்க்க வேண்டும்.
மின்வேலி
பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும். விவசாய நிலங்களில் பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மின் வேலி அமைக்கும் பட்சத்தில் அமைப்பவர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.