குளிர்பானங்கள்-பழச்சாறுகள் தரமாக வழங்க வேண்டுகோள்
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள்-பழச்சாறுகள் தரமாக வழங்குவதை வணிகர்கள் உறுதி செய்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கோடை காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க பல வழிகளில் குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ள இந்த கோடை காலத்தில், வணிகர்கள் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும். சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்திட வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்த கூடாது. மிக்சி போன்ற உபகரணங்களை வாய்பகுதி சீலிட்டு மூடியிருத்தல் மற்றும் காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். சூரிய ஒளி படும் இடத்தில் குடிநீர் கேன்கள், பாட்டில்களை இருப்பு வைக்க கூடாது. இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான பாதுகாப்பான தரமான குளிர்பானங்களை வழங்கிட வேண்டும். பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 9444042322 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.