சேரகுளத்தில்பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட கோரிக்கை
சேரகுளத்தில்பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சேரகுளத்தில் மாணவ, மாணவியரின் நலன் கருதி பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நேற்று கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்து உள்ளனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். புளியம்பட்டி சுற்று வட்டார கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், புளியம்பட்டி, ஒட்டுடன்பட்டி, நா.புதூர், நாரைகிணறு, கைலாசபுரம், கொடியன்குளம், கீழக்கோட்டை, கலப்பபட்டி ஆகிய கிராமங்களுக்கு புதுக்குடி துணைமின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களாக எங்கள் பகுதிக்கு மும்முனை மின்சாரம் சரிவர கிடைப்பது இல்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள விவசாயம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் எங்கள் பகுதிக்கு தடையின்றி முழுநேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பள்ளி கட்டிடம்
கருங்குளம் ஒன்றிய இந்து மக்கள் கட்சி தலைவர் மணிகண்டன் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், கருங்குளம் அருகே உள்ள சேரகுளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் எங்கள் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அந்த பள்ளிக்கூட கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்த நிலையில் காணப்படுகிறது.
இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தோம். அதன்பேரில் பழுதடைந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கட்டிடம் முழுவதும் பழுதடைந்து இருப்பதால், மாணவ, மாணவிகள் நலன் கருதி பழுதடைந்த கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பஞ்சாயத்து துணைத்தலைவர்
திருச்செந்தூர் தாலுகா பள்ளிபத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பொன்ராஜ் கொடுத்த மனுவில், பள்ளிபத்து கிராமத்துக்கு முறையான வழித்தடத்தில் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
மணியாச்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் வி.கருப்பம்மாள் தலைமையில் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பஞ்சாயத்து பகுதியில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை.
எனவே, எங்கள் பகுதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.