இரட்டை அகலப்பாதையில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை


இரட்டை அகலப்பாதையில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை
x

சென்னை-நெல்லை இடையே இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால், தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை


சென்னை-நெல்லை இடையே இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால், தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரட்டை அகலப்பாதை

குதிரைக்கு கொம்பு முளைப்பதும் மதுரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இருவழி ரெயில் பாதை அமைவதும் ஒன்று என்று பேசி வந்த நிலையில் தற்போது, சென்னை-நெல்லை, தூத்துக்குடி இரட்டை அகலப்பாதைப்பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. அதிசயிக்கத்தக்க வகையில் பல வருடங்கள் கடந்து இந்த திட்டம் நிறைவேறியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இந்த இரட்டை அகலப்பாதை மூலம் தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

எனவே, இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று தென்மாவட்ட பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் பகல் நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், இரவு நேரத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை-சென்னை இடையே பகல் 10.45 மணிக்கு கூடல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் நள்ளிரவு 11.15 மணிக்கு மகால் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வந்தன.

கூடுதல் ரெயில்கள்

இதில், மதுரை-சென்னை கூடல் எக்ஸ்பிரஸ் ரெயில் குருவாயூர் வரை நீட்டிக்கப்பட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும், இரவு நேர மகால் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்த ரெயில் தற்போது கொல்லம் வரை நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது. அதாவது, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்ட ரெயில்கள் கேரள பயணிகளின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து திருச்சி-நெல்லை பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டது. இந்த ரெயிலை திருவனந்தபுரம் வரை நீட்டித்து அந்த ரெயிலையும் கேரள மாநிலத்து பயணிகளுக்கு கொடுத்து விட்டனர். இது குறித்து மதுரை கோட்ட அதிகாரிகளும், தென்னக ரெயில்வே தலைமை அலுவலக அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பதாகவும் தென்மாவட்ட பயணிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது.

ஆனால், தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போது, ஒரு வழிப்பாதையாக இருப்பதால் ரெயில்கள் இயக்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர். தற்போது இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் கூடுதல் ரெயில்கள் இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story